Thursday, November 21, 2019

விடை காணா வினாக்கள் . . .


அடித்தது வலிக்கவில்லயாயினும் - அம்மா 
       அடித்தால் அழுகை வருவதெப்படி ?

கடித்ததில் எச்சில் இருந்தும் - அக்கா 
    கண்டுக்காமல் வாங்கி தின்பதெப்படி ?
     
மிதித்தது பெரிய கோழியாயினும் - குஞ்சு 
      மிரளாமல் அங்கேயே சுற்றுவதெப்படி ?

உழைப்பவன் உழைத்து ஓடாய் தேய - ஒன்றுமறியா  
       ஊதாரிக்கு அதிர்ஷ்டம் அடிப்பதெப்படி ?

காதல் பிறந்ததும் காதலர் யாவரும் - திடீர் 
    கவிஞராய் மாறுவது எப்படி ?

பட்ட காலிலே மறுபடியும் - காயம் 
         பட்டு பட்டு ஆருவதெப்படி?

கெட்ட குடிகளே எப்பொழுதும் - ஊரில் 
       கெட்டு ஒழிவதுவும் எப்படி ?

கைப்பிடி தந்த மரத்தையே கோடாரி - வேரோடு  
    சாய்க்க முயல்வது எப்படி ?

நாள் முழுதும் உழைத்திட்ட ஒருவன்
    நாணலில் கவலையின்றி உறங்குவதெப்படி ?
     
கண் மயங்கி தூங்கியும் பேருந்தில் - ஊர் 
     காணாமலே கண் முழிப்பதெப்படி ?         

உதவ முடிந்த சக்தி  இருந்தும் - சொந்தம் 
      கதவை மூடும் கண்ணியம் எப்படி ?

ஊர், பேர், இனம் அறியா நட்பு  - உயிரில் 
    இரண்டற கலந்து வளருதே எப்படி ?

முறை மாமன் சொந்தமிருக்க - காதல் 
     முரணான சாதிப்பையனோடு வருவதெப்படி?

சில நாள் பழகி சிறகொடிந்த காதலுக்கு - விலையற்ற 
      உயிர் கொடுக்க துணிவதெப்படி  ?

வாழ்ந்தால் உன்னோடு மட்டுமே - சொன்னவள் 
      எவனோ ஒருவனோடு, மகிழ்ச்சியாய் எப்படி ?

மணமுடிந்த பத்தாம் மாதத்தில் - மழலை 
  ஒன்றை அவள் பெறுவதுவும் எப்படி ? 

போகிற போக்கில் அவள் பார்வையில்பட்டால் 
    விழிநீர் பொங்கி வழிவதுவும் எப்படி ?
  
பதினாறு பொருத்தமும் பொருந்தியும் - சிலருள் 
    வாழ்க்கை பொருந்தா இரகசியம் எப்படி ?

படிப்பும் அறிவும் மிகுதியாய் இருக்க - பணம் 
    படைதவர்கிடையே மட்டும் மணவிலக்கெப்படி ?

எந்த குற்றமும் அறியா பிஞ்சுகள் - சிறு சுற்றமும்  
   இன்றி அனாதையாய் எப்படி ?

தோளில் மார்பில் தாங்கிய பிள்ளைகள் - பெற்றோரை   
    நடுவில் தொலைப்பது  எப்படி ?

போவது சொர்கமே உறுதியாயினும்  - உயிர் 
     போக மறுக்கும் அச்சம் எப்படி ?

இன்னும் விடை காணா வினாக்கள் பல இருந்தும் -  கவிதை 
      கண் மூட முடிந்தது எப்படி ?

கா(ய்) (கா)தல்





பூசணிக்கா(ய்கா)தல்


மும்முறை உன் முகதரிசனம், 
           போதும் என் பூஜை முடிந்தது !

பிறந்த பயன் பெற்றுவிட்டேன் 
       பிரியுமுன் சுற்றிவிட்டேன் !

 தேவதை உன் சிரம் சுற்றியதால் 
           தேவனாய் மாறிவிட்டேன் !

கண்ணடி பட்டதென  தானோ  - எனை 
        காசுகள் வைத்து சுற்றினர். . . 

என் கண் உன் அடி படத்தான் 
        இன்று குருதியொடு கிடக்கிறேன் இங்கே !
       --நடைபாதையில் உடைந்த பூசணிக்காய் ! ! ! !

காதல் (பாகம் - I ) . . . அறியாக் காதல்


 பரட்டை முடியாடும் பாதி
     முடி காத்தாடும் 
அள்ளி சொருகயில - அதுல 
   நாலு வீழ்ந்தாடும்  . . .

மூக்குல நீர் ஒழுகும் - முடி 
   தாண்டி எண்ணெயொழுகும்
மெழுகு மேனியெங்கும் 
   முத்து முத்தாய் வேர்வையொழுகும் . . . 

சில்லுக்கோடு கோடு போட்டு 
  சில்லு ரெண்டு தேடி எடுத்து - குதிச்சி 
நீ சில்லாடயிலே  - குதி 
   கால் படத்தான் சில்லும் ஏங்கும் . . . 

கல்கோனா ஒன்னு வாங்கி
    கடவாயில ஊறவச்சி - மொதிச்சி 
வருகையிலே கடிச்சி நீயும் 
   பங்கு வைக்க . . . 

மூணு பங்கு வந்துச்சுன்னு  - அதுல 
    ரெண்டு எனக்கு நீட்ட  
ஒன்ன மட்டும் நான் எடுத்து  - உன் 
    எச்சிலோடு கலந்து திங்க 
நெனச்சா மூச்சு நிக்குதடி - தொண்டை 
       குழியும் இப்போ விக்குதடி . . . 

பருவம் வந்து சேரவில்லை - அப்போ 
  பக்குவமும் நமக்கு இல்லை 
பாழா போன மனசு ரெண்டும் 
  பாலா தேனா கலந்து போச்சே . . . 

பருவம் வந்து உன்ன சேர - பளிங்கு 
  கல்லா உருவம் மாற 
கூட்டுக்குள்ளே நீ போகையிலே  -  என் 
  கூடு தனியே ஏங்கியதே !

பத்து நாளோ பாஞ்சி நாளோ - உயிர்  
  பட்ட பாட்டை என்ன சொல்ல 
ஒத்தை பனை என் ஓலத்தை சொல்லும்,
   காட்டு கேணி என் கவலைய சொல்லும்  . . . 

சடங்கு முடிஞ்சி, சந்தனம் பூசி 
   பட்டுத்தி, பாவாடை கட்டி  
குனிஞ்ச தல நிமிர்தயில -  உன் 
   குவளை முகம் பார்த்திருந்தா. . . . . 

கல்லுக்கும் காதல் வரும் 
   முள்ளுக்கும் மோகம் வரும்

                                  --- தொடரும் இக்காதல் II - ஆம் பாகத்தில்

அழகி !



இரவழகா? நீயழகா?

நிலவு நீந்தும் வானோடையில்
நீர் அலையாய் நீவி செல்லும் மேகமும் ,
வென்குமிழி போல் தெறித்து நிற்கும்
விண்மீன்களும்- அழகாய் தெரியவில்லை
அத்தனையும் ஒரு சேர கொண்டிருக்கும்
உன் வண்ண முகத்திற்கு முன்னால்..........!

உனக்காக மட்டுமே!





நீயும் பெண்தானே!!!!!!!!!!!!!

என்கவி உரிமை
      உனக்கே என்றேன்,
தலைப்பாய் உனை தரவும்
     தயங்கி நின்றாய் . . . !

உரிமையோடு என்னுள்
      ஊடுருவு என்றேன்,
தொடுவதும்   கூட உனை 
      தீட்டு என்றாய் . . . !

பார்த்தால் போதும்

      பசியாருவேன் என்றேன்,
பசித்திரு உன்னால் 
     பயனில்லை என்றாய் . . . !

நிழல் தீண்டல் போதும் 
    உயிர்ப்பேன் என்றேன்,
உறவாட  உன்னோடு
   முடியாது என்றாய். . .!

தொடர்வரிகளாய் தொடரும்

      என் காதல் என்றேன்
 முற்றுப்புள்ளி வைத்து
     முடித்துகொள் என்றாய் . . .  !

என்னுயிர் வேண்டுமா
     எடுத்துக்கொள் என்றேன்,
உயிரால் என்ன முடியும்
    உலகில் என்றாய் . . . !

கவி, காதல், உயிர், உரிமை
    உண்மையே!

என்னோடு நீ இல்லையேல், 

     எதுவும் இனி என்னில் இல்லையே! 






உச்சம் !!!!!!!!


                        உச்சம் !!!!!!!!




காதில் கானம்பாடி
            கவிதையாய் ராகம் இசைத்து,

மெல்லிய சிறகால் விசிறி,
            மேனியெங்கும் வட்டமிட்டு,

ஒற்றை காலிட்டு
           ஓய்யரமாய் கீழிறங்கி,

பக்குவமாய் பதம்பார்த்து
          பார்த்த இடத்தில்பல்துளையிட்டு,


ஓரிரு சொட்டு உறிஞ்சும் 
             உரிமையில்லா கூவம் கொசுவே;


நீ


அறிவிப்பில்லாமல்
              ஆர அமர பேசாமல்,

எச்சரிக்கை கொடுக்காமல்,
           எவ்வித சமிஞ்ஞையும் செய்யாமல்,


அப்படியே ஆழம் கிளறி அடி உயிரை அள்ளி போகும்


என் காதலிக்கும் மேல்.......






இரகசிய சிநேகிதி !


தோளில் சாய்வாய் சில நேரம்  - என் 

      தோழியாய் வாழ்வாய் சில நேரம் !

இடையில் இடருவாய் சில நேரம் - நீ 
     இல்லாமல் நான் செல்லேன் சில நேரம் !

மழையில் குடையாய் சில நேரம் - மாறுவாய்
      நிழலாய் சில நேரம் !

என் அத்தனையும் உன்னுள் சில நேரம் - என் 
      இரகசிய அறையாய் சில நேரம் !

காதலன் அறியா காரியமும் - பகிர்ந்தேன் 
      உன்னோடு சில நேரம்!

காட்ட முடியா கோபத்தையும் - உன்னிடம் 
      காட்டியதுண்டு சில நேரம்!

கட்டியணைத்து அழுது புலம்ப - என்
   காதலனாய் மாறினாய் சில நேரம்!

உணர்வுகள் புரியும் "கைப்பை" யே - என் 

   உறவென்றும் நீயே எந்நேரமும்!

கோடை மழை ! ! !


சித்திரையில் ஒரு நாள்
   சில்லென்று காற்று வீச 
திரண்டு நின்றது மேகம் 
   திறந்து கொண்டது வானம் . . . 

பருவம் எய்யப் பார்த்திருக்கும்
  பாவையின்  பால் கனியாய்  
முளைத்து நின்ற வித்தின், 
 உச்சியில் முத்தான முதல் துளி  . . . 

கால்களின் ஊடே ஓடும் நீர் 
 ஒருவேளை கர்வம் கொண்டதோ ?

ஆகட்டும்

மறுபடியும் என் கால்களின் இடுக்கில் - நீ 
  மன்னிப்புகோரி நிற்கத்தான் வேண்டும் . . . 

முளை தட்டிய பயிரின் கோபம் !

************************************************

பச்சையம் யாவும் - இன்று 
    பழுப்பாய் போனது எதனால் ?

குடித்து மகிழ நீர் வேண்டும் 
  கூடி மகிழ காற்று வேண்டும் . . . 
பகலவன் பார்வையில் நெருப்பிருந்தும்  - எனை 
  பார்வையில் அவனே ரசிக்க வேண்டும் . . . 

கொட்டிய  நீரில் கழிவினை கழுவும்
 முற்றிய இலையின் புலம்பல் கேட்டு 
மூன்று நாளுக்கு முன்பு தளிர்ந்த  
  கிளையின் கொழுந்து வியந்தது கண்டு  . . .

தூசியும் துரும்பும் மாற்றிய பழுப்பை 
  துடைத்தது  எவரின் கரங்கள் இன்று . . . 
   
சிறு கொழுந்தின் வியப்பு !

*********************************************

இப்படியாக  . . . . . , 

பங்குனியில் கண்விழித்த நாய் குட்டி 
   பத்து நாள் முன் ஓடுடைத்த பருந்துக்குஞ்சு 

நேற்று காலை வெயில் பார்த்த கூட்டுப்புழு 
  நெய்தலின் கரையாடும் சின்னஞ்சிறு நண்டு 

திக்கி திகைக்கும் இவையாவுக்கும் 
 என்ன சொல்லி புரியவைக்க . . . 

இது தான் மழை என்று . . . !

உடன்கட்டை





ஒற்றைக்  குச்சி 
       உள்ளே சில இலைகள் 
பற்ற வைத்துப் பார்த்தேன் 
      பரவச நிலை தெரிந்தது ...

கங்கி நகர கரும்புகை 
        உள் போக
இழுத்து விட்ட மூச்சும்
         இருமலுடன் வெளியேற ....

புற்றும் வளர்ந்தது புறையோடி திரிந்தது .............

பற்ற வைத்த எனைப்பார்த்து 
       பல் இளித்த சாம்பல் சொன்னது 
கொள்ளிவைத்தது நீயா ?
          நானா ? !!!








மலர்களே தொடுத்த மாலை . . .

கற்பனைகளால் கவரப்பட்டு சிந்தனையில் வரையப்பட்ட சிறு கவிதையே இது . . .தவறாய் இருந்தால் தணிக்கை செய்துவிடவும். 




அந்தியும் மசங்கிடுச்சி  - ஆள் 
            அரவம் நின்னுடுச்சி 
ஆலமர பொந்துக்குள்ளே 
            ஆந்தையும் விழிச்சிறுச்சி,

மல்லி மலர்ந்துருச்சி
            மாஞ்சோலை அடங்கிருச்சி,
மஞ்சள்மேனி கொண்ட வஞ்சி 
            மஞ்சம் மேல் படர்ந்திருச்சி,

நூலாடை மேலாடையாய் - பால்மேனி
            படர்ந்திருக்கும் பாலாடையாய்,

ஆடை ஒதுக்கி அருந்தும் 
            அமுத பால் நீயாக,
அன்று வள்ளுவன் எழுத்தில் 
             முறையாய் மூன்றாம் பால் நானாக,

சூடான மூச்சுக்காற்று - சுண்டி 
              இழுக்கும் கூந்தல் வாசம்,
மேடான இரு மலர்படுக்கை  - வெண்டி 
               இழுக்கும் வெளிர்ந்த மேனி.

உச்சி நுகருகையில் உள்போன 
                உன் வாசம் 
 மூச்சி நிலை மாற 
                மேலும் கீழும் முட்டியதே !
தழுவிடும் கரங்கள் தாவி -  தொடர்ந்தது 
                மெதுவாய் பணியை 
விழுதென கோர்த்த உடலால்  - இறந்தது  
                 காற்றும் உடலிடையே! 
    
அணைத்த அழுத்தத்தில் அச்சுகளும்
                  அழகாய் அங்கங்கே பதிந்தனவோ!
  அங்கம் மோதியதில் இருதிடல்களும்
                   இடையே இடம்பெயர்ந்து சென்றனவோ !

செவ்விதழ் படுக்கையின் மேல்
    ஈரிதழ் இடம்பிடிக்க
நாழிதல், நாவும் சேர்ந்து - இட்டது 
    இனிமையாய் கோலம் . . .    

ஆடைபாரம் அறிந்ததில்லை முன்வரை,   
        பேடை உடல் போர்த்திய ஒருநூல்  - மேடை 
தாங்கிய கலன்கள் போல்  -  பெரும் 
       உறுத்தல் இருஉடலின் இடையே  . . . 

காம்புகள் புணர்ந்து  காவியம் இசைத்திட
     விழுந்தாள் மலர்ந்த மாலையாய்  என்னில் ! 
சூடிய மாலை சுவையினை தாங்கி 
         கலந்தேன் பூவோடு தேனாக பெண்ணில் !


Monday, November 18, 2019

அணி


என் இதய இடுக்கினில் 
எனையறியாமல் நுழைந்த அவளைப் போல் . . .

அவள் விரல்களின் அணியாய் 
உனை அணிவிக்க விரும்புகிறேன் . . . 

என்னால் அவள் வெட்கம் அணிவாள்  - இனி 
அவ்வப்போது அவளை நான் அணிவான் . . .



Inkem inkem inkem kaavale - தெலுகு பாடலுக்கு என் தமிழ் வரிகள்

ததிகின தக்கஜனு  ததிகின தக்கஜனு
தத்தை உன்னை நினைத்திட்டால் நெஞ்சமெங்கும் ஆனந்தம் 

தவழ்ந்திடும் பிள்ளை கண்டு தானும் அங்கே தாழ்ந்திடும் 
தந்தை முகம் மலர்ந்திடும் தவம் போன்ற ஆனந்தம் 

கன்னி கண்கள் கண்ட நாளே 
கவிதை கரு நாளே 
உன்னில் என்னை கண்ட நாளே
இனி வாழ் நாள் திருநாளே

தேவதை எனை தேடி வந்ததே
தேன் நிலவு கீற்று கொண்டதே

திங்கள் ஒளி எண்ணில் பட்டதும் 
நான் தேவலோகம் ஆளும் அந்த தேவனாகி போனேனே 

ததிகின தக்கஜனு  ததிகின தக்கஜனு
தத்தை உன்னை நினைத்திட்டால் நெஞ்சமெங்கும் ஆனந்தம் 

தவழ்ந்திடும் பிள்ளை கண்டு தானும் அங்கே தாழ்ந்திடும் 
தந்தை முகம் மலர்ந்திடும் தவம் போன்ற ஆனந்தம் 

ஆதி முதல் அடி வரை அழகோ
ஆத்தி அவள் தேகமோ கமுகோ
அவ்விரண்டு அதிசய விடயங்கள்
மடு கொண்ட மலைகளோ 

கரையும் வெண்ணெய் கண்ணங்கள் உனதோ
அதில் கரையும் எண்ணங்கள் எனதோ
அண்ணம் அவள் அசைந்திட காண்கையில்
அடங்கிய தண்டமோ . . .

அலையலையாய் ஆடிடும் கூந்தல் நுனிகள்

அது படரும் மெல்லிய பனி பின் மணிகள்

Tuesday, February 27, 2018

என்னில் மட்டுமே அடக்கம் . . .

தானாய் கிடைத்த சாபமோ
கேட்டு வாங்கிய வரமோ  அறியோம்

கட்டாய மாற்றம் கடவுள் செயலோ
கால இயல்போ தெறியோம்


கருணை கொஞ்சம் அதற்க்கும்
கடுகளவு இருக்கும் போலும்

வயதுக்கு வந்தவளையும்
வயது இருப்பவளையும் மட்டுமே தீண்டும்


அந்த நாள் வாழ்வில்
அவ்வளவு எளிதாய் மறக்காது


அம்மியால் வயிற்றில்
அடி வாங்கியதுண்டா ?

அடி வயிற்றில் அரிவாளால்
அருபட்டது உண்டா ?

குறியில் கோணி ஊசி
குத்தியது உண்டா ?


வாங்கிய வயிற்றில்
இன்னொரு அடி விழுந்தால்

அறுபட்ட இடத்தில்
மறு கீறல் விழுந்தால்

குழியின் ஆழம் காண
குத்தூசி அழுத்தப்பட்டால்


அனுபவித்து இருந்தால்
அறிந்திருக்கும் என் வலி

ஒரு நாள் வேதனை அல்ல
ஒவ்வொரு மாதத்தின் ரோதனை இது

வலி ஒரு புறமிருக்க
வழியும் குருதியை கொஞ்சம் சொல்லவா ?


சீல் பிடித்த சிரங்கு அல்ல - ஆனால்
செந்நீர்  கசிந்தோடும்

சற்று நேரம் தாமதித்தால் - கசிவு
மாறி கால்வழி நீளும்


கட்டிய ஆடை அவிழும் முன்பே
காவியாய் மாற்றும் அமிலம் அறிவாயா ?

ஆடைகள் உனக்கோ
வேர்வைகளில்  நனையும்

வேர்வைகளும் என்னில்
செந்நீர் போர்த்தும்


சாம்பல் பிடித்து பூசியதுண்டு
உரிபஞ்சு கொண்டும் ஒட்டியதுண்டு

துண்டுகள் வைத்து முடிந்ததுண்டு
திண்டு பொருத்தியும் நடந்ததுண்டு


காலத்தில் மாறியது
கழித்து போட்ட பொருட்களே

அணு அளவும் மாறவில்லை
அங்கத்தின் சூத்திரங்கள்


சொன்னது யாவும் இங்கு
சில்லறைகள் மட்டும் தான்

பட்ட பாட்டை சொன்னால் - இன்னும்
பத்து பக்கம் தாண்டும்


கட்டுப்பாடுகள் விவரம் சொல்கிறேன்
காது கொடுத்து கேள் கொஞ்சம்


வாழும் வீட்டில்
வாசற்படி தாண்டினால்

வந்தோரை "வாங்க" வென்று
வணங்கி அழைக்க முயன்றால்


பெற்ற மகனை கையோடு
கட்டி அணைக்க ஆசைகொண்டால்

தவிக்கும் நாவுக்கு நாமாக
தண்ணீர் தொட்டு எடுத்தால்


தீட்டென்று திட்டுவர்
தீண்ட தகாதவளாய் நடத்துவர்


அறிவாரோ தெரியாது
அவர் பிறப்பும் அங்கிருந்தென்று

அறிந்துகொள் நீயாவது !


தூமை தான் எனினும்
தூய்மை இந்த தாய்மை  என்பதை


Thursday, November 30, 2017

வள்ளல்

             
அண்டத்தின் அப்பன் 
ஆதவன் அனல லைகளால்

அகிலத்தின் அரசிகள்  
ஏரி கடல் ஆறு புனலோடு

காம கதிர்கள் கொண்டு 
களியாட்டம் அதன்மேல் ஆடி 

காம கதிர்கள் கொண்டு 
களியாட்டம் அதன்மேல் ஆடி 

கருவுற செய்து வானில் 
கருநீல கருவறை அமைத்து 

குறுமாக்கள் உருவாக்கி 
குட்டி குட்டியாய் பெற்றெடுத்து 

தவழ்ந்தாட  அனுப்புகிறான் 
தரணிக்கு தொடர்ச்சியாய் 

கெடுத்ததில்லை இதுவரை 
கொடுப்பவரே வெய்யோன் மக்கள் 

கர்ணன் மட்டுமன்றி 
கார்மேக துளிகளும் தான் 

அள்ளி கொடுப்பதில் 
அவர்களுக்கும் தான் ஈடுண்டோ ?

குறிஞ்சி குன்றுகளில் ஏறி 
குதித்தாடும் அருவியாய் ஆட 

முல்லை மலர்களில் மறைந்து
ஒளிந்தாடும் ஓடையை ஓட 

மருத மண்ணில் விழுந்து
மின்னும் மணிகளாய் மாற  

நெய்தலோடு நிறுத்தி கொண்ட 
நிலைப்பாடு தான் என்னவோ 

பார்க்காத இடங்கள் எல்லாம் 
பாலையாய் மாறி தான் போனதோ 

வஞ்சனை இன்றி 
வந்து போகும் அன்னையே 

வணங்குவோம் எங்களை 
வாழவைக்கும் உன்னையே