Tuesday, February 27, 2018

என்னில் மட்டுமே அடக்கம் . . .

தானாய் கிடைத்த சாபமோ
கேட்டு வாங்கிய வரமோ  அறியோம்

கட்டாய மாற்றம் கடவுள் செயலோ
கால இயல்போ தெறியோம்


கருணை கொஞ்சம் அதற்க்கும்
கடுகளவு இருக்கும் போலும்

வயதுக்கு வந்தவளையும்
வயது இருப்பவளையும் மட்டுமே தீண்டும்


அந்த நாள் வாழ்வில்
அவ்வளவு எளிதாய் மறக்காது


அம்மியால் வயிற்றில்
அடி வாங்கியதுண்டா ?

அடி வயிற்றில் அரிவாளால்
அருபட்டது உண்டா ?

குறியில் கோணி ஊசி
குத்தியது உண்டா ?


வாங்கிய வயிற்றில்
இன்னொரு அடி விழுந்தால்

அறுபட்ட இடத்தில்
மறு கீறல் விழுந்தால்

குழியின் ஆழம் காண
குத்தூசி அழுத்தப்பட்டால்


அனுபவித்து இருந்தால்
அறிந்திருக்கும் என் வலி

ஒரு நாள் வேதனை அல்ல
ஒவ்வொரு மாதத்தின் ரோதனை இது

வலி ஒரு புறமிருக்க
வழியும் குருதியை கொஞ்சம் சொல்லவா ?


சீல் பிடித்த சிரங்கு அல்ல - ஆனால்
செந்நீர்  கசிந்தோடும்

சற்று நேரம் தாமதித்தால் - கசிவு
மாறி கால்வழி நீளும்


கட்டிய ஆடை அவிழும் முன்பே
காவியாய் மாற்றும் அமிலம் அறிவாயா ?

ஆடைகள் உனக்கோ
வேர்வைகளில்  நனையும்

வேர்வைகளும் என்னில்
செந்நீர் போர்த்தும்


சாம்பல் பிடித்து பூசியதுண்டு
உரிபஞ்சு கொண்டும் ஒட்டியதுண்டு

துண்டுகள் வைத்து முடிந்ததுண்டு
திண்டு பொருத்தியும் நடந்ததுண்டு


காலத்தில் மாறியது
கழித்து போட்ட பொருட்களே

அணு அளவும் மாறவில்லை
அங்கத்தின் சூத்திரங்கள்


சொன்னது யாவும் இங்கு
சில்லறைகள் மட்டும் தான்

பட்ட பாட்டை சொன்னால் - இன்னும்
பத்து பக்கம் தாண்டும்


கட்டுப்பாடுகள் விவரம் சொல்கிறேன்
காது கொடுத்து கேள் கொஞ்சம்


வாழும் வீட்டில்
வாசற்படி தாண்டினால்

வந்தோரை "வாங்க" வென்று
வணங்கி அழைக்க முயன்றால்


பெற்ற மகனை கையோடு
கட்டி அணைக்க ஆசைகொண்டால்

தவிக்கும் நாவுக்கு நாமாக
தண்ணீர் தொட்டு எடுத்தால்


தீட்டென்று திட்டுவர்
தீண்ட தகாதவளாய் நடத்துவர்


அறிவாரோ தெரியாது
அவர் பிறப்பும் அங்கிருந்தென்று

அறிந்துகொள் நீயாவது !


தூமை தான் எனினும்
தூய்மை இந்த தாய்மை  என்பதை


No comments: