Thursday, August 18, 2016

துண்டு சீட்டு . . .

அவள் ஆடை பறக்க விட்டு ,
அளவாய் அவளுக்கு கோபம் மூட்டுகிறாய் . . .

அவளுக்கு அளவாய் ,
 எனக்கு அளவுக்கதிகமாய்  . . .

வச்சிக்கிறேண்டா வருண பகவான்,
ஒரு நாள் உன்னை . . .

**************************************************
அவள் தலை சாய்த்து 
       தூங்கு வதற்கென்றே,
கடினமான என் மார்பகத்தை 
        மிருதுவாக்கி கொண்டேன்  . . .

**************************************************

இரு நிமிட இடைவெளியின் - அந்த
அறுபது நொடிகளிலும் வந்து போகும்
ஆறாயிரம் நினைவுகளில்,
ஒன்றில் கூட உன் முகம்
   இல்லாமல் இல்லை . . .


**************************************************

பெற்றவளை பிரிகையில் 
சிரிப்புடனும், 
உற்ற எனை பிரிகையில் 
அழுகையுடனும் 
அவள் விடை பெறுவது  . . .

எனக்கு மட்டுமே வாயக்கப்பெற்ற பேறு  . . .

**************************************************

கை அசைத்து பிரிந்து செல்கயில் . . .

அசைவுகள் இருப்பதாய் நினைத்து
  கொண்டு நீ . . .

அசைவற்று உன் கை 
    நிற்பதை கண்டு,
போகாமல் நில் 
    என்பதாய் எனக்கு  . . . 

**************************************************
அத்தனை பாவனைகளும் 
 அத்துப்படி எனக்கு - தனித்தனியே 

கண்ணீருடன் சிரித்து கொண்டு,
கவலை சற்றே மறைத்து கொள்ளும் 
திறமை மட்டும் கற்று கொடு எனக்கு  . . .

உன்னிடம் காண்பிக்க அல்ல - உன் 
கவலையை புரிந்து கொள்ள  . . .

**************************************************

காயங்களை மறைத்து கொண்டு  - எனக்காய் 
கணம் தோறும் மலர்ச்சியுடன் அவள்   . . .

மலர்ச்சியில் மறைந்து கிடக்கும் 
மர்மங்கள் அறிந்தும்,
அவிழ்த்து அவளை 
அழவைக்க விரும்பாமல்  நான் . . . 

**************************************************

உன் அரவணைப்பில்
   என்னுயிர் நீர்த்துவிடும்
        ஆசையில்லை எனக்கு . .

போகும் இடத்தில்உனை போல்,
புதையல் கிடைக்கா தென்பதை அறிவேன் . . .

**************************************************





நந்தவன நடனம் . . .


வண்டுகள் வாசம் செய்யும் 
வசந்த மலர்கள் வசிக்கும் வனத்தில்,

கண்டு  எதையும்  அறிய முடியா - அக்
காரிருள் ராத்திரி பொழுதில் . . .

படை போல் வரிசை கட்டி 
படர்ந்து நிற்கும் மரங்களின் கீழே,

நெளி நெளியாய் வளைந்து செல்லும் - தார்
 சாலையில் இரு உயிர்களின் பயணம் . . . 


கைகள் இரண்டும் கோர்த்து கொண்டும் 
 கதைகள் ஏதோ பேசி கொண்டும்,

கண்கள் நான்கும் பார்த்து கொண்டும்
காதல் பரி மாறி கொண்டும்,

கணங்கள் கடந்த பொழுதறியாமல்
மனங்கள் இரண்டும் மயங்கிய நிலையில் . . .

மொட்டினை முகர்ந்து செல்லும்
மாலை நேர மனிகாற்றுப் போல்,

பட்டுடல் தொட்டு பார்க்க
முனைந்தஅவன் கைகள் கண்டு

வெடுக்கென தள்ளி விட்டு  - அவள் 
வெகுளியாய் விலகி விழ,

திடுக்கென துள்ளி எழுந்து
திண்டாடிய அவள் உடலை,

படக்கென கைகளில் ஏந்தி
பந்தைபோல் விரல்களால் தாங்கி . . .

இடைகோர்த்து பிடிக்க அவன்கை,
இன்பத்தில் நாணிய அவளை !

பதம் பார்த்து பற்கள் பதிக்கும்
பழம் கொண்ட அணில் போல் அவனும்,

இடம் பார்த்து இதழினை பதிக்க - அவளோ
தடையின்றி தந்தாள் தேனை . .


பலவந்தம் . . .



இரவுப்பயணம்,
ஜன்னலோர இருக்கை,
சத்தமில்லா இரயில் பெட்டி,
சாரலோடு கை கோர்த்த தூறல் . . .

தூறல்கள்  நடுவில்
துள்ளல் போடும் மின்னல்,
மின்னலுக்கு தாளம் போடும்
மிருதங்க இடி . . . 

உன் வரவு என்னோடு
இல்லாமையால்,
இவை யாவையும் ரசிக்க வேண்டிய 
கட்டாயத்தில் . . .  நான் !

என்ன தவம் செய்தனோ !


எங்கோ இருக்கும் மரத்தில் ,
எப்படியோ கனிந்த கனி கொத்தி ,
எப் பறவையோ தின்று
    போட்ட விதை போல் நான் . . .

கல்லின் மேல் விழுந்திருந்தால்
 காய்ந்து கிடந்தே கருகியிருப்பேன் . . .

கள்ளி செடிக்குள் விழுந்திருந்தால்
 கண் திறப்பது கூட சந்தேகம் தான்  . . .

புல் வெளியாய் நீ தாங்கி இருக்க
புளிய மரமாய் இன்று நானிருக்கேன் . . .

தொப்புள் கொடி உறவெனில்
தமயன் என்பதாய் இருந்திருப்பாய் !

 இரத்த பாசம் உன்னோடு எனில்
  அங்காளியோ , பங்காளியோ ஆகி இருப்பாய் !

தூரத்து சொந்தமோ , தாரத்தின் சொந்தமோ,
எதோ ஓர் உறவாய் இருந்திருப்பாய் !

ஏதும் அற்ற உறவிருந்தும் ,
 எதற்க்காக என்னோடு நீ ?

சொந்தங்கள் சேர்ந்து விடும்
   செல்வங்களை பார்த்ததும் !
பந்தங்கள் பரவி விடும்
  பதவிகள் பார்த்ததும் !

பரிதவித்து நான் நின்ற போது,
பக்கத்தில் நீ மட்டும் தானடா !

 எதற்க்காக என்னோடு நீ ?

நான் அழ பிறர் சிரிக்கையில்,
நான் வீழ பலர் நினைக்கையில்

தோள் கொடுத்தவனும்
தூக்கி விட்டவனும் நீ ஒருவன் தானடா !

கர்ணன் நட்பு கூட
   கடன் தீர்க்க தானே !
செஞ்சோற்று கடன் தீர்க்க தானே !

காட்டிய அன்பிலும் ,
ஊட்டிய நட்பிலும்

கர்ணனுக்கும் மேல் நீ - எனக்கு
 கண்ணனுக்கும் மேல் நீ ! !