அணு பிளந்து, அண்டம் வளர்ந்து
கண்டம் பிரிந்து, கருவாய்மாறி
கால மாற்றத்தால் கழனியோடு உருவான
கடவுளின் குழந்தை எம்பாரதமே . . .
அனைதுலகுக்கும் அறிவியல் புகட்டி
அர்த்தசாஸ்திரம் முறையாய் இயற்றி
ஆள்வதெற்கென்றெ பிறந்த நாம் - எப்படி
ஆனோம் அடிமையாய்., ?
விற்க வந்தவன் விலை பேசிட - விற்று
விட்டோம் நம் மண்ணை
விலை போனது நம் அன்னை . . .
ஒண்ட வந்த பிடாரியொன்று ஊர்
பிடாரியை விரட்டிய கதை
டச்சுகளும் , தானிஷ் களும்
பிரெஞ்சுகளும், பிரிட்டிஷ்களும்
பிணம் திண்ணி கழுகுகளாய்
பிரித்தெடுத்தனர் எம்மண்ணை . . .
காற்றுக்குக் கப்பம் கட்டினோம்
கஞ்சி குடிக்க வரி கட்டினோம்,
காதலன் காதலியை பார்க்க ,
கட்டிலில் கணவனோடு படுக்க,
குழந்தைகள் கூடி விளையாட
குலப்பெண்கள் மஞ்சள் நீராட,
அனுமதி வேண்டி நின்றோம் - ஆம்
அடிமையாய் வாழ்ந்து வந்தோம் ! !
அறத்திற்கு பேர் போனோம்
ஆக்கத்திற்கு பேர் போனோம்,
வீரத்திற்கு பேர் போனோம்
விருந்தோம்பலுக்கும் பேர் போனோம்
அத்தனை உணர்வுகள் இருந்தும் ஏனோ
பயனின்றி வீணாய் போனோம் . . .
காயம்பட்ட கத்திகள் எத்தனை ,
கணவன் இழந்த மனைவிகள் எத்தனை - ஒற்றை
குமாரனை ஒளித்து வைக்காமல்
போருக்கு அனுப்பிய பெண்கள் எத்தனை . . .
வெள்ளையனே ,
கத்திக்கு கத்தி என்றால் எங்கள்முன்
காய்ந்து போன எள்ளடா நீ ,
கருவில் பெற்ற பயிற்சி போதும் -
உங்கள் கரு அறுத்து கழுகுக்கு போட . . .
தூர இருந்து தூக்கி எறிந்த தோட்டாவும்
பொசுங்கி வந்து பீரிட்ட பீரங்கியும்
எம்மூர் நாயும் கையாளும் சில முறை
பேயும் கையாளும் . . .
அரசன் முதல் ஆண்டி வரை ,
குழந்தை முதல் குமரி வரை ,
குருதிகள் எத்தனை எம்மண்ணை
குளிப்பாட்டி கொஞ்சியிருக்கும் . . .
எதற்கும் அஞ்சியவரும் அல்ல - நம்மை
எவரும் மிஞ்சியவரும் அல்ல. . .
எண்ணற்ற பெரியோரும் - எதிர்த்து
நின்ற இளைஞரும்
மாண்டு மடிந்த இம்மண்
மீண்டது எப்படி பாரீர் . . .
போஸ் தலைமையில் போர்படை ஒன்று
கத்தி விடுத்தது, தோட்டா தொட்டது . . .
திரட்டிய படைகள் நடப்பதை கண்டு
காலனி படைகள் கண்தூக்கம் இழந்தது . . .
கல்லடி படாமல் கண்ணடி பட்டதோ !
கண்ணாடி அணிந்தவன் காணாமல் போனான் . . .
தலையின்றி படையும் படுத்தது போரில்
கடைசி முயற்சியும் முறிந்தது போரில் . . .
இரு நூறு ஆண்டுகள்
இருளில் கழிந்தாலும் . . .
இடுப்பில் துணியோடு
ஒளியாய் ஓர் ஆத்மா ! ! !
கத்தி பிடித்த கை - கதர்
இராட்டை சுற்றிட
ஓங்கிய கைகள் யாவும்
ஒடுங்கி போய் நின்றது . . . .
அகிம்சை ஆயுதம்
மீட்டது மண்ணை,
அடிமை உடைத்து - உயிர்
பெற்றது அன்னை . .
பெற்ற சுதந்திரம் இருளில் என்றாலும்
ஏற்றம் என்றுமே விடியலை நோக்கி . . .
பெற்றது அவர்களாயின்
போற்றிக் காப்பது நாமாகட்டும் . . . . .
இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள். . .