சொன்னது நீதானே !
அற்றைத் திங்கள் , அழகிய நன்நாள்
அருகில் அமர்ந்து அழகாக சிரித்து,
வெட்கி நாணி வேறு பக்கம் பார்த்து
எச்சில் விழுங்கி எதார்த்தம் விடுத்து,
வியர்வை நனைக்க விரல்களை பிசைந்து
படபட வார்த்தைகளாய் பயந்தவாறு
"உன்னை காதலிக்கிறேன்" என்று
சொன்னது நீதானே !
பெற்றோர் மறுத்தாலும்
உற்றோர் எதிர்த்தாலும் ,
உனையன்றி யாரையும்
எள்ளளவும் நினையேன் !
சொன்னது நீதானே !
மற்றவர் போல் அல்ல - உற்ற
உனை நான் நினைப்பது,
மற்றது போல் அல்ல - உயிர்
உருக உனை காதல் செய்வது !
சொன்னது நீதானே !
காலைக் கதிரவன்
நீயாக வேண்டும் ,
மாலை மதியுமாய் நீ
மட்டுமே வேண்டும் !
நாளின் முதன்முதல்
நான் காணும் உலகம்
உன்முகம் தனிலே
தொடங்கிட வேண்டும் !
நாழிகை முடியும் நேரமும்
அருகில் - உன்
அருகில் - உன்
முகம் கொண்டு இமை
மூடிட வேண்டும் !
மூடிட வேண்டும் !
சொன்னது நீதானே !
ஒரு நாள் உன் குரலில்
நனையாமல் நகர்ந்தால்,
மறு நாள் என் மனம்
மழையரியா பாலையாய் !
சொன்னது நீதானே !
உன்பெயர் கொண்ட
குழந்தைகள் கண்டால்
என் இதழ் குவியும்
கன்னங்கள் மேலே !
உனை போல் யாரேனும்
நகர்ந்திட கண்டால்
என் இதழ் விரியும்
உன் எண்ணங்களாலே !
சொன்னது நீதானே !
இத்தனையும் கூறிய உன் உதடுகள்
இத்தனை கூரிய சொல்லை எப்படி
சொல்லத் துணிந்தது ! ? "மறந்து விடு . . ."
உள்ளிருந்து வந்த வார்த்தைகள்
உண்மையெனில் . . .
உன் உதடு வேறு பெயரை
உச்சரிக்குமெனில் . . .
என்கை விடுத்து உன்னால்
நடைபோட முடியுமெனில் . . .
என் குரல் கேட்க நீ
தேவையில்லை எனில் . . .
உற்றவராயன்றி மற்றவராய்
எனை எண்ணினாய் எனில் . . .
மறந்து விடுகிறேன் . . .
உன்னையும் உன் மேல் கொண்ட காதலையும் அல்ல
உன்னோடு சேர்ந்து வாழ முடியா இவ்வுலகை . . .
மறந்து விடுகிறேன் . . .

