அரை குறை தூக்கத்தில் எழுந்து ,
அழுதுகொண்டே ஆடைகளை உடுத்தி
அரக்க பறக்க ஆகாரம் கொண்டு
அவசரமாய் அள்ளி முடித்து, சீவி
அன்றாடமாய் எனக்கு ஆரம்பித்த அந்த நாள் . . .
அப்பாவின் முத்தத்தோடும்
அண்ணனின் சண்டையோடும்,
தாத்தாவின் சிரிப்போடும்
பாட்டியின் பாசத்தோடும்
அன்றாடமாய் பள்ளிக்குப் புறப்பட்ட அந்த நாள் . . .
தாய் கை பிடித்துத் தொங்கி
தாழ்வாரம் தாண்டிக் குதித்து
வாசல் நின்று சைகை செய்து
வருகிறேன் என்று சொல்லி
வழக்கமான சிரிப்போடு வேனில் ஏறிய அந்த நாள் . . .
இருக்கையில் அமர்ந்து இயற்கையை பார்த்தபடி
இசைபோல் நகரும் மரங்களை ரசித்தபடி
நண்பன் கொடுத்த பழத்தினை ருசித்தபடி
படிக்க நினைக்கும் பாடத்தை வெறுத்தபடி
பள்ளியில் இறங்கிய அந்த நாள் . . .
அதே கூச்சலோடும் ,கொன்டாட்டத்தோடும் - ஆசிரியரின்
அதட்டலோடும், மிரட்டலோடும்
அழகாய் தான் நகர்ந்தன நேரங்கள் . . .
பத்து மணி வரை . . .
அப்பாவின் ஆடை போல் அணிந்து
ஆறு பேர் வந்தனர் விரைந்து
கண்களில் ஆத்திரத்தோடும்
கைகளில் ஆயுதங்களோடும் . . .
அன்பாய் தான் சிரித்தேன் நானும்
அதற்கு ஏன் சுட்டனர் , விடையில்லை ?
பழம் கொடுத்த நண்பன் இருந்தான்
பார்பதற்குள் படுத்து விட்டான் பக்கத்தில் . . .
நெற்றி பொட்டில் அவனுக்கு ஏனோ
பொட்டு வைத்தனர் தோட்டா கொண்டு
எழுப்பிப் பார்த்தேன் எழுவான் என்று
படுத்தவன் விளையாட்டாய் படுத்தால் தானே . . . ?
ஆசிரியர் மிரட்டினால் - நீர்
அப்படியே போய்விடும் எனக்கு,
அடிப்பதை விடுத்தனர் அவர்களும்
அப்படியே விட்டு விடுவார்களா இவர்களும் . . . ?
அப்பாவை கூப்பிட்டுப் பார்த்தேன்
அம்மாவையும் கூப்பிட்டுப் பார்த்தேன் - அழுகையோடு
ஆசானைக் கூப்பிட்டுப் பார்த்தேன் - இறுதியில்
ஆண்டவனை கும்பிட்டும் பார்த்தேன் . . .
பதறியும் பலனில்லை ,
கதறியும் கருணையில்லை. . .
இதோ விழுந்துவிட்டேன் . . .
விழுகையில் எனக்கு சிந்தனை ஒன்றே
எதற்கு சுட்டனர் எங்களை என்று . . . ??
ஆசிரியர் அவர்களை அடிதிருப்பரோ ?
அண்ணன் ஒரு வேலை கிள்ளியிருப்பானோ ?
அண்ணன் ஒரு வேலை கிள்ளியிருப்பானோ ?
கொடுக்காமல் தின்ன கொய்யாவிற்க்காகவோ ? - என்
இரவு அழுகை அவர்களை எழுப்பியிருக்குமோ ?
எதற்காக ????????









