கணையத்தையும், கல்லீரலையும்
களவாடியதை -
கவனிக்காமலும் இல்லை
கவலை படாமலும் இல்லை . . .
மூளையையும், மூல நாளத்தையும்
முடக்கிய போதும்,
இரத்தத்திலும் , பித்தத்திலும்
இரசாயணம் ஏற்றிய போதும் கூட ,
இரக்கம் கொஞ்சம் இருக்கும் உனக்கு
என்ற சிறிய எண்ணம் எனக்கு . . .
முழுவதுமாய் நீ ஆட்கொண்டாலும்
மூச்சை தானே எடுப்பாய் முடிந்த வரை . . .
பின் ஏன் இந்த மூர்க்கம் உனக்கு . . ?
தாய்களை தண்டிக்கும்
தர்மம் எங்கும் இல்லையே ?
கால காலமாய் கண்ணீரையே
காணும் தாய்களுக்கு
கடமையாய் கொடுக்கும் உன் பங்கோ இது ?
புண்ணாக்கிய இடங்கள் போதும்
பச்சிளங்கள் பசியோடிருக்கும்
. . .!
மார்பகம் தேடும்
மழலையிடம்,
மாற்றாக எதை கொடுக்க இயலும் ?
புற்றுநோயே ! ! !
தீண்டுவதை நிறுத்திவிடு, தூர போய்விடு . . .
தீண்டுவதை நிறுத்திவிடு, தூர போய்விடு . . .
மார்பில் விளையாட ,
காம்பை கடித்துவைக்க,
பால் பருகி பசியாற
பிள்ளைகளுக்கு மட்டுமே உரிமை கொடுத்துள்ளேன் . . .
புற்று கட்ட எண்ணினா யெனில்
புகைப்போரிடம் காட்டு உன் திறமையை . . .!


