Thursday, February 6, 2014

அன்புள்ள அம்மாவுக்கு . . .

ஒரு ஏழை தன் தாய்க்கு எழுதும் கடிதம் . . . 



அன்புள்ள அம்மாவுக்கு ,

        நல்லா இருப்பனு நம்புறேன் ! 

கோடை காலம் முடிஞ்சிருச்சி 
         பருவமழை தொடங்கிருச்சி 
பார்த்து இருந்துக்கம்மா 
         பழையசோறு விட்டுரும்மா  . . .

கிலோ ஒரு ரூபாய்க்கு 
         கெடைக்குதுன்னு நெனைக்காத 
 ரேஷன் கடை அரிசி வச்சி 
          ஓன் வயித்த கழுவாத  . . . 

வாய்வு ஏறிடும் 
        வயிறெல்லாம் வீங்கிவிடும் 
  கால் கை இழுத்துகிடும் 
         கண்ணெல்லாம் மங்கிவிடும் . . . 

மாசம் மொத வாரம் 
     வந்துடும் என் ஊதியமும் 
ஆழாக்கு அரிசி வாங்கி  
     அடுப்பெரிச்சி சாப்பிடும்மா . . . 

முந்தானை கிழிஞ்ச சேலை 
      தலை தொடைக்க வச்சிக்கோ 
முறையா கட்ட ஒரு 
      பருத்தி சேலை எடுத்துக்கோ . . .


கீத்து கிளிஞ்சிருக்குமே - கொண்ட 
     கம்பும் மச்சிருக்குமே 
ஓலை ஒடுக்கிவிட்ட பாலை 
      நாறும்  அருந்திருக்குமே . . . 

ஓட்டை ஒடிசலிலே ஒழுகி 
     மழை ஊத்துசின்னா 
கடனா கீத்து வாங்கி - கம்புல 
      சும்மா சொருவிடும்மா . . . 
அடுத்த மாசம் எப்படியும் 
      அதுக்கும் சேர்த்து அனுபுச்சிடுவேன் . . . 

வயக்காடு வச்சவனேல்லாம் 
    மழை பேய தவமிருப்பான் 
நாம நனைவோமுனு 
    நாவிட்டு சபிச்சிராத . . . 

தூறல் விழுந்தாக்க 
    தொவட்டிக்கமா துணி எடுத்து 
சாரல் வரும் நேரம் கதவை 
   சாத்திக்கமா சாக்கெடுத்து 

மொழுகி வச்ச திண்ணையெல்லாம் 
   மொதிச்சி போகும்  தண்ணி பட்டா 
பொடலை மட்ட கட்ட வச்ச 
    படுதா போட்டு மூடிக்கமா . . . 

ஒத்தையா பெத்த புள்ள 
   உனை பிரிஞ்சி வாழ்ந்தாலும் 
உன்னையே நெனச்சிருப்பேன் 
    உனக்காகவே வாழ்ந்திருப்பேன் . . .

கஷ்டம் ஏதும் எனக்கில்லை - உன்னை 
    கவனிக்கத்தான் ஆளில்லை 
காலம் நேரம் கூடுமம்மா - நாம 
    கஷ்டமெல்லாம் போகுமம்மா 

பார்த்து இருந்துக்கமா . . .

---இப்படிக்கு 

உன் அன்பு மகன் குபேரன்