Friday, March 24, 2017

சுடச்சுட . . .



நாளிதழ் பிரிந்து
  சேரும் முறையாய் கையில்,
நாவிதழ் பிரிந்து சேரும் 
    முறை வேண்டும் நம்மில் . . .

தினம் சில புத்தம்
  புது செய்திகளும்  ,
சில நேரம் முந்நாளின்
  தொடர் நிகழ்வுகளும்  . . .

அணி விளம்பரங்கள்
   அழகாய் அகற்ற பட்டு   ,
ஆடை அறிவிப்புகள்
 ஆங்காங்கே விலக்கப்பட்டு. . .

ஆரம்ப ஏடுகள் சில
 ஆடுகள செய்திகளோடும் ,
ப(பி)ண்டம் மாற்றும் முறை
 வணிக வரிகளாய் தொடர . . .

முடிந்தது ஏடு வானிலை
 அறிக்கையோடு,
மூச்சின் வெது வெதுப்போடு
மிதமான மழை இன்று . . .
   

Tuesday, March 21, 2017

அழகிய தமிழ் மகன் . . .


கவிதை போல் திருநாமம் 
  கார்த்திகேயா அழகன்றோ !
கண்டவுடன் பக்தி தூண்டும் 
 கடவுள் நீ அழகன்றோ !

நெளிநெளி யாய் சிகை கொண்ட 
  நேசமணி அழகன்றோ !
குவளை மலர் கண்கள் உனது 
  குளிர்ச்சியூட்டும் அழகன்றோ !

பிறை நுதல் கொண்ட நீர் 
  பொட்டோடு அழகன்றோ !
முறை கொண்ட முகம் உனது 
  பட்டு போன்ற அழகன்றோ !

கடுக்கன் அணி கோர்த்த 
  காது மடல் அழகன்றோ !
இடுக்கண் கலைத்தாடும் - உன் 
  இறையருள் அழகன்றோ !

அரச கோலம் காணுகையில்
  அதிகார அழகன்றோ !
ஆண்டி கோலம் நிற்க காண
  கோடி கண்கள் போதாதன்றோ !

சங்கத் தமிழ் சாற்றுகையில்
  சப்தம் எல்லாம் அழகன்றோ !
சரித்திர நாயகன் நீ
  சாதித்தவை கொஞ்சமன்றோ !

பிறப் பழகு
  பிஞ்சு மொழியழகு
முருகன் பெயரழகு
   ஆணில் நீ பேரழகு  !

வலக்கை வேலழகு ,
 இடக்கை கொடியழகு !
வணங்கி உனை பாடுகையில்
 வாசம் பொங்கும் என் அலகு !

வாகன மயிலழகு
  வானை தொடும் புகழ் அழகு  !
வாஞ்சை கொண்டு வணங்குவோர்க்கு
  சொர்க்கம் இந்த மண்ணுலகு !

ஆறுபடை வீடு கொண்டாய்
  நூறு படை போரில் கொண்டாய்!
ஆணவம் கொண்டதால் தானோ
  ஆத்திரத்தில் அசுரனை கொன்றாய் !

ஓங்காரம் ஒன்று போதும்
  ஆங்காரம் அழிந்து போகும் !
ஓங்கி விழும் தீமை யாவும்
  தாங்கி விழும் உன் அருளால் !

துதி பாட துதி பாட
 தூர் எடுக்கும் வரிகள் தந்து
பதி பாட பக்தி பாட
சொல் தந்த தமிழை வணங்கி

என் சிரம் தாழ்த்துகிறேன்- தலைவா
 உன் தாள் பணிந்து . . .

அல்லல் போக்கும் நாயகனே ! - என்றும்
அழகிய தமிழ் மகன் நீயே!