Saturday, September 23, 2017

ஈடுண்டோ . . .!


பயம் கலந்த பக்தியோடு
 பக்தன் ஒருவன் வேண்டினான் தினமும் . . .

தாகமென்று வேண்டினான், 
 தாய்ப்பால் கிடைக்க செய்தேன் !

தலை கோத விரல்கள் கேட்டான் 
 தாய் மடி பரிசளித்தேன் !

பசி என்று வேண்டினான்
 பால் சோறு ஊட்ட வைத்தேன் !

படிப்பறிவு வேண்டி நின்றான்
  பாடசாலை செல்ல வைத்தேன் !

பட்ட மேற்படிப்பு கேட்டான்
  பகுத்தறிவும் புகுத்தி வைத்தேன் !

படிப்புக்கேற்ற வேலை வேண்ட 
 மடி கணினியோடு பணி கிடைக்க செய்தேன் !

வசதியாய் வாழ்க்கை விரும்ப
  வங்கி கணக்குகளில் கோடியை நிரப்பினேன் !

தூர தேசம் தீராத ஆசை என்றான்
  தாரமும் தந்து, தூரமாய் அனுப்பினேன் !

அவனுக்காக , ஆசை தீர
 அனைத்தையும் வேண்டிக்கொண்ட அவன் ,

அவனுக்காய் வாழ்ந்தவளின்
 ஆயுளை இதுவரை  கேட்டதில்லை !

குறைந்த பட்ச வேண்டுதலில்
அன்னை ஆயுள் அடங்கியிருந்தால் ,

குமுறி அழும் நிலையை மாற்றி
  கூட்டியிருப்பேன் அவள் நாட்களை !

சவமாய் சாய்ந்து கிடக்கும்
 அன்னை பாதம் கட்டிக்கொண்டு,

சபிக்கிறான் என்னை கடவுளா
  நீ என்று . . .!

அருகில் ஆன்மாவை அமர்ந்து
   அவள்  இன்னும்  வேண்டுகிறாள்,

 மகனின் ஆயுள்  மட்டும்  . . .