காலம் கடந்த ஞானநிலையில்
கண்கள் மூடி
படுத்திருந்தேன் . . .
விழிகள் திறந்து பார்த்த
போது
விடியல்கள் ஆயிரம் விரைந்திருந்தது . . .
மாற்றங்கள் மட்டும் மாறாதிருப்பது
மண்ணில் மாறும் மாற்றத்தில் முதலே !
மாற்றம் காண கண்கள் ஏங்க -
மனம்
மாறும் முன், முன்னே நடந்தேன் . . .
காடுகள் எங்கே? கழனிகள் எங்கே ?
கரை புரண்டோடும்
காட்டாறுகள் எங்கே ?
மாடுகள் எங்கே ? மடுகுகள் எங்கே ?
மஞ்சள் குளித்தாடும் மங்கையர் எங்கே ?
அறமொன்றே அகரமாய் கொண்ட
அரசியல் எங்கே ?
ஆக்கமொன்றே ஆகாரமாய் கொண்ட
அமைப்பு முறை எங்கே ?
முன்னே நடந்தேன் . . .
காடு, கழனிகள் யாவும்
கட்டிட உருவில் இங்கே !
காட்டாறுகள் பாய்ந்த இடம்
காகித குப்பை மேடுகளாய் ! ஐயோ !
பசுக்கள் கொண்டு
பசியாறிய காலம் போய்,
பசுக்கள் கொன்று
பசியாறும் கொடுமை இங்கே !
முன்னே நடந்தேன் . . . இல்லை
அச்சத்தால் அவ்விடம்
பெயர்ந்தேன் !
தவமிருந்து பெற்ற பிள்ளைகளே,
தவிக்க விட்டு சென்ற சோகம்
!
பாலும், பாகங்களும் விற்றது போக,
பாசமும், காதலும் பகடையாய் ஆனது கண்டால் !!!
மூர்ச்சையாகும் முன் , முன்னே நடந்தேன் . . .
கற்பு துறந்த மனிதர்கள் கண்டு
கண்ணீர் சிந்தி அழுகையிலே,
கருப்பை கடனாக கொடுப்பதை
கண்டு
கண்ணீர் நின்றது ! .
. . குருதி கொட்டியது !
முன்னே நடந்தேன் . . .
இம்முறை
தள்ளாடி நடந்தேன் !
பெட்டிக்கடைகள் அழகாய்
பல்பொருள் அங்காடிகளாக !
மதுக்கடைகள் தரைகள்
கூட
மயங்க வைக்கும்
பளிங்குகளில் ! ஆகா !
படிப்பறிவு புகட்டும் எம்மூர்,
பள்ளிகள் இன்னும் சிதைந்த நிலையிலேயே !
மயங்கி சரிந்தேன் ,
மறுபடி எழும்பும் ஆசை அறவே
இன்றி . . .
