Monday, April 3, 2017

நான் மரம் பேசுகிறேன் . . .


ஆண்டவனால் அவனியில்
  அவதரித்தோமோ ?
பரிணாமத்தால் பாரில்
  மாற்றம் பெற்றோமோ ?

படும் இன்னல்களோ
  பல ஆயிரங்கள் தாண்டும் . . .

ஒதுங்கி ஓரமாய் நிற்கும் - என்னை
  உரசி போகும் மாடுகளுக்கும்
சல்லாப சிந்தனை கொண்டு -அவளை
  சரசம் ஆடும் ஆண்களுக்கும்  . . .

பேதம் ஒன்றும்
  பெரிதாக இல்லை . . .

கொத்தும், குலையுமான என் கனிகளை
  கொத்தி போகும் காக்கைகளுக்கும்,
குற்றுயிரும் குலையுயிருமாய் - அவள்
  கற்பு கொத்தும் காளைகளுக்கும் . . .

பேதம் ஒன்றும்
   பெரிதாக இல்லை  . . .

போகிற போக்கில் கிள்ளப்படும்
   என் இலைகள் போல்தானோ!
பார்க்கிற பார்வையில் பந்தாடும்
  அவள் இடையின் நிலை !

பேதம் ஒன்றும்
   பெரிதாக இல்லை  . . .

பழகிய தென்றல் தானே !
 பலமுறை தீண்டி செல்லும்,
தடையின்றி தலை சாய்த்தேன்
 கிழித்து சென்றது சூறாவளியாய்

பழகிய சுற்றம் தானே !
 பண்போடு நடந்து கொள்ளும்,
விரல் கோத தலை சாய்த்தாள் - அவள்
 சேலையை விளக்கியது மற்றோரு விரல் . . .

பேதம் ஒன்றும்
   பெரிதாக இல்லை  . . .

நிழல் தேடி என்
 கிளை நாடும் பட்சிகள் - இறுதியில்
மலம் கழித்து
 மயிர் எறிந்து செல்லும்

மனம் தேடி அவள்
 குணம் நாடும் ஆண்மை  - இறுதியில்
மடி தேடி
 மஞ்சம் தேடும்

பேதம் ஒன்றும்
   பெரிதாக இல்லை  . . .

கஷ்டங்களும் காயங்களும்
 ஒன்று போல் இருப்பினும்,
அறிவிலும் ஆற்றலிலும்
ஆறு, ஆயிரம் மடங்கு உயரியவள்  !

வெறும் கட்டையாய் நீ எனில்
 வேரறுப்பது பரிட்சயம் ,
பெரும் காட்டை அளிக்கும் தீ எனில்
 புது யுகம் நிச்சயம் !

மரமாய் நான் நிற்பது
 இயற்க்கையின் விதி !
மரம் போல் உனை வைப்பது
 மா க்களின் சதி !

வேரூன்று !
அசையா அளவு வேரூன்று !

கிளை பரப்பு !
கீழ் விலா அளவு கிளை பரப்பு !

மரமாக அல்ல
 மகா சக்தியாக !