ஆண்டவனால் அவனியில்
அவதரித்தோமோ ?
பரிணாமத்தால் பாரில்
மாற்றம் பெற்றோமோ ?
படும் இன்னல்களோ
பல ஆயிரங்கள் தாண்டும் . . .
ஒதுங்கி ஓரமாய் நிற்கும் - என்னை
உரசி போகும் மாடுகளுக்கும்
சல்லாப சிந்தனை கொண்டு -அவளை
சரசம் ஆடும் ஆண்களுக்கும் . . .
பேதம் ஒன்றும்
பெரிதாக இல்லை . . .
கொத்தும், குலையுமான என் கனிகளை
கொத்தி போகும் காக்கைகளுக்கும்,
குற்றுயிரும் குலையுயிருமாய் - அவள்
கற்பு கொத்தும் காளைகளுக்கும் . . .
பேதம் ஒன்றும்
பெரிதாக இல்லை . . .
போகிற போக்கில் கிள்ளப்படும்
என் இலைகள் போல்தானோ!
பார்க்கிற பார்வையில் பந்தாடும்
அவள் இடையின் நிலை !
பேதம் ஒன்றும்
பெரிதாக இல்லை . . .
பழகிய தென்றல் தானே !
பலமுறை தீண்டி செல்லும்,
தடையின்றி தலை சாய்த்தேன்
கிழித்து சென்றது சூறாவளியாய்
பழகிய சுற்றம் தானே !
பண்போடு நடந்து கொள்ளும்,
விரல் கோத தலை சாய்த்தாள் - அவள்
சேலையை விளக்கியது மற்றோரு விரல் . . .
பேதம் ஒன்றும்
பெரிதாக இல்லை . . .
நிழல் தேடி என்
கிளை நாடும் பட்சிகள் - இறுதியில்
மலம் கழித்து
மயிர் எறிந்து செல்லும்
மனம் தேடி அவள்
குணம் நாடும் ஆண்மை - இறுதியில்
மடி தேடி
மஞ்சம் தேடும்
பேதம் ஒன்றும்
பெரிதாக இல்லை . . .
கஷ்டங்களும் காயங்களும்
ஒன்று போல் இருப்பினும்,
அறிவிலும் ஆற்றலிலும்
ஆறு, ஆயிரம் மடங்கு உயரியவள் !
வெறும் கட்டையாய் நீ எனில்
வேரறுப்பது பரிட்சயம் ,
பெரும் காட்டை அளிக்கும் தீ எனில்
புது யுகம் நிச்சயம் !
மரமாய் நான் நிற்பது
இயற்க்கையின் விதி !
மரம் போல் உனை வைப்பது
மா க்களின் சதி !
வேரூன்று !
அசையா அளவு வேரூன்று !
கிளை பரப்பு !
கீழ் விலா அளவு கிளை பரப்பு !
மரமாக அல்ல
மகா சக்தியாக !
