Thursday, February 11, 2016

மாறா நிலை ! ! !





காலம் கடந்த ஞானநிலையில்
      கண்கள் மூடி படுத்திருந்தேன் . . .
விழிகள் திறந்து பார்த்த போது
      விடியல்கள் ஆயிரம் விரைந்திருந்தது . . .

மாற்றங்கள் மட்டும் மாறாதிருப்பது
       மண்ணில்  மாறும் மாற்றத்தில் முதலே !
 மாற்றம் காண கண்கள் ஏங்க - மனம்
       மாறும் முன், முன்னே நடந்தேன் . . .

காடுகள் எங்கே? கழனிகள் எங்கே ?
       கரை புரண்டோடும் காட்டாறுகள் எங்கே ?
மாடுகள் எங்கே ? மடுகுகள் எங்கே ?
   மஞ்சள் குளித்தாடும் மங்கையர் எங்கே ?

அறமொன்றே அகரமாய் கொண்ட 
    அரசியல் எங்கே ?
 ஆக்கமொன்றே ஆகாரமாய் கொண்ட 
   அமைப்பு முறை எங்கே ?

முன்னே நடந்தேன்  . . .

காடு, கழனிகள் யாவும்
 கட்டிட உருவில் இங்கே !
காட்டாறுகள் பாய்ந்த இடம்
  காகித குப்பை மேடுகளாய் ! ஐயோ !

பசுக்கள் கொண்டு 
    பசியாறிய காலம் போய்
பசுக்கள் கொன்று 
   பசியாறும் கொடுமை இங்கே !

முன்னே நடந்தேன் . . . இல்லை
  அச்சத்தால் அவ்விடம் பெயர்ந்தேன் !

தவமிருந்து பெற்ற பிள்ளைகளே,
  தவிக்க விட்டு சென்ற சோகம் !

பாலும், பாகங்களும் விற்றது போக
  பாசமும், காதலும் பகடையாய் ஆனது கண்டால் !!! 

மூர்ச்சையாகும் முன் முன்னே நடந்தேன்  . . .

கற்பு துறந்த மனிதர்கள் கண்டு 
   கண்ணீர் சிந்தி அழுகையிலே
கருப்பை கடனாக கொடுப்பதை கண்டு
  கண்ணீர் நின்றது !  . . . குருதி கொட்டியது !
  
முன்னே நடந்தேன் . . . இம்முறை
  தள்ளாடி நடந்தேன் !

பெட்டிக்கடைகள் அழகாய் 
  பல்பொருள் அங்காடிகளாக !
மதுக்கடைகள்  தரைகள் கூட 
  மயங்க வைக்கும் பளிங்குகளில் ! ஆகா !

படிப்பறிவு புகட்டும் எம்மூர்
 பள்ளிகள் இன்னும் சிதைந்த நிலையிலேயே !

மயங்கி சரிந்தேன்
  மறுபடி எழும்பும் ஆசை அறவே இன்றி  . . .