Friday, July 18, 2014

காதல் (பாகம் - II). . . ஞாபகம் வருதே ! ! !


  
ஞாபகம் வருதே !



நாதாங்கி கதவ சாத்தி  
  நாலாபுறமும் பார்வைய சுழட்டி
ஆத்தாள கூப்பிடும் சாக்குல
  ஆத்துபுறம் போறத சொன்ன  . . . 

கஞ்சியிலே பொதஞ்ச சோற 
  கைவெரலால் பெசஞ்சு கரைக்க 
காதல் கொண்ட சோறும்நீரும் 
   கரைஞ்சி கழனி நீரா ஆச்சே . . . 

ஆன நீரும் பானை சுத்த 
  அள்ளி குடிக்க கையில் எடுக்க 
வாசபுறம்  அழைச்ச குர
  அவதானே சித்தம் சொல்ல . . . 

பசி போன எடமும் தெரியல 
  பானை போன தடமும் தெரியல 
கை கழுவவும் மனசுக்கு தோனல 
  கால்கள் போகும் வேகமும் புரியல . . . 

சோத்து பானை தலையிலாட 
  சேர்ந்த மூடி சலங்கயாட 
தண்ணீ கொடம் இடுப்பிலாட 
  கூந்தல் குஞ்சம் கொசுவமாட  . . . 

பின்னால வந்தவன் என்னை,
  கண்ணால கூப்பிட நீயும்
முன்னால போகிற  போக்குல  - உன் 
  முடி வாசம் தீண்டிச்சி  மெதுவா . . . 

அறியாம எனையும் நானே 
   தறிகெட்ட ஆறாய் ஆனேன் 
பொறி தொட்ட எலியா துடிச்சி 
    புள்ளரிச்சு பூத்து போனேன் . . . 

சொட்டும் நீரா தாவணி சரிய
  பட்டுவிடாம பாவாடை இருக்க
இடுக்கில் பார்த்த இடமது இழுக்க
  இடுப்பை கண்டு நான் ஏக்கமாய் சிரிக்க  . . .

அழகாய் கோபம் நீ மூக்கினில் காட்ட 
   அதற்குள் தாவணி அழகினை மூட 
பேசி ,சிரிச்சி போனது இருக்கே 
  அன்பே அது உனக்கு ஞாபகம் இருக்கா . . . ?

சோடிக்  கிளி கொஞ்சியத பார்த்து 
  காட்டு புறாக் காதலை பார்த்து 
அக்கம் பக்கம் ஆளுங்களை பார்த்து -  அன்பே  
   அங்கம் தொட்டது ஞாபகம் இருக்கா ? 
  
கருக்கருவா கருத பார்த்து 
  கட்டியணச்சி அறுத்தது போல 
வரப்போரம் வந்தவ உன்னை
  வாரி அணைச்சது ஞாபகம் இருக்கா ?

வெக்கமும் , பயமும் சேர்ந்து வந்ததும் 
   வெடுக்குனு என்னை நீ தள்ளி விட்டதும் 
அம்மானு அலறி நான் வாரில விழுந்ததும் 
 சத்தம் அடக்க நீ எம்மேல சரிஞ்சதும் 


உயிரே , உனக்கு ஞாபகம் இருக்கா ?

                                             --- தொடரும் இக்காதல் III - ஆம் பாகத்தில்

No comments: