Monday, January 12, 2015

மன்னிப்பாயா ? ? ?



முதல் பார்வையில் முத்தம் பதிப்பதும்,
 அடுத்த நெருக்கத்தில் அனுபவிக்க  நினைப்பதும்   
 அழகிய காதலின் அம்சம் இல்லையென 
உண்மை காதலை உன்மேல் கொட்டியது - நீ 
  நடைமுறை பழக்கமென நினைக்கவில்லை போலும் . . .

 மன்னித்துவிடு ! ! !

வகை வகையாய் ஆடையுடுத்தி 
  அழகு பார்க்க நினைத்துவிட்டேன் 
வளையத்திற்குள்  இருப்பது தான் - உன் 
விருப்பமென்று அறியாமல் . . .

 மன்னித்துவிடு ! ! !

அதிகாரம் கொண்டுவிட்டால் 
 சுதந்திரம் போய்விடுமென்று 
அகங்காரம் அடக்கி நின்றது  - உனக்கு 
  இளக்காரமாய் தெரிந்தது போலும்  . . .

 மன்னித்துவிடு ! ! !

பெற்றவள் இடத்தினை உலகில் 
  எவளும்  தொட்டிட முடியாதிருந்தும் - காதல் 
கொண்டதால் உன்னையே அவளாய் 
  கொண்டது தவறுதான் உணர்ந்தேன் இன்று  . . .

 மன்னித்துவிடு ! ! !

யோசனை , விவாதமும் உன்னுடன் மட்டுமே - கேட்டு 
  எடுத்த முடிவுகள் எத்தனையோ  இருக்க 
சுய முடிவுகள் தெரியாமல் அல்ல - நமக்குள் 
சுயங்கள் சுயமாய் வேண்டாம் என்று  . . .

 மன்னித்துவிடு ! ! !

அரசியின் வயிற்றில் பிறந்தவன் நான் - இளம் 
  அரசியாய் உன்னை கருதிவிட்டேன் 
பணிப்பெண் பட்டம் வேண்டி நீயோ 
  பரிகாசமாய் என்னை எண்ணினாய் போலும்  . . .

அறியாமல் தந்த ஸ்தானத்திற்காக . . .

 மன்னித்துவிடு ! ! ! 

செல்வங்கள் யாவும் வாழ்கையின் தேவையே 
  தேவைக்கு இருப்பினும் பகட்டுக்காக இல்லையோ ?
செல்வம் எல்லாம் நீயென நினைத்தேன் 
  சேர்வதற்கு நாதியில்லை என நினைத்தாய் போலும்  . . . 

 மன்னித்துவிடு ! ! !

அழகிய மனையாள் அருகிலிருக்க 
  ஆசைக்காக துணையாள் தேடாததும்
அருகில் அழகி நீ இருக்கையிலே 
 அடுத்தவளை என் மனம் நினைக்காததும் 
அலுத்துவிட்டது போலும் உனக்கு  . . .

 மன்னித்துவிடு ! ! !

உன் பாடல்கள் என் விருப்பங்களாய் 
  உன் வெறுப்புகள் என் வேதனைகளாய் 
உன் தேடல்கள் என் ஆர்வங்களாய் 
 இல்லாதிருந்தால் பிடித்திருக்கும் போலும் உனக்கு  . . .

 மன்னித்துவிடு ! ! !

தாயை போல தாங்கியது தவறோ?  - உன்னை 
 சேயாய் நினைத்து கொஞ்சியது தவறோ ?
கோபிக்காமல் விட்டு கொடுத்தது தவறோ
  கூடி கொஞ்சி பேசியது தவறோ  ?

 மன்னித்துவிடு ! ! !


கூறியிருந்தால் ஒருவேளை 
  மாறியிருப்பேன் உனக்காக . . .

எனினும் எனக்கான அடையாளம் இதுதான் என்றும்  . . . 

மாற நினைக்கவில்லை நான் - என்னை
  மறந்து போனாலும் நீ  . . .

மன்னித்துவிடு ! ! !



No comments: