Sunday, December 21, 2014

தாகம் தணிந்ததா தாலிபான்களே . . . ?


 




அரை குறை தூக்கத்தில் எழுந்து , 
   அழுதுகொண்டே ஆடைகளை உடுத்தி 
அரக்க பறக்க ஆகாரம் கொண்டு 
   அவசரமாய் அள்ளி முடித்து, சீவி 
அன்றாடமாய் எனக்கு ஆரம்பித்த அந்த நாள் . . . 

அப்பாவின் முத்தத்தோடும்
   அண்ணனின் சண்டையோடும், 
தாத்தாவின் சிரிப்போடும் 
   பாட்டியின் பாசத்தோடும் 
அன்றாடமாய் பள்ளிக்குப்  புறப்பட்ட அந்த நாள் . . . 

தாய் கை பிடித்துத்  தொங்கி 
  தாழ்வாரம் தாண்டிக்  குதித்து 
வாசல் நின்று சைகை செய்து 
  வருகிறேன் என்று சொல்லி 
வழக்கமான சிரிப்போடு வேனில் ஏறிய அந்த நாள் . . .

இருக்கையில் அமர்ந்து இயற்கையை பார்த்தபடி 
 இசைபோல் நகரும் மரங்களை ரசித்தபடி 
நண்பன் கொடுத்த பழத்தினை ருசித்தபடி 
 படிக்க நினைக்கும் பாடத்தை வெறுத்தபடி 
பள்ளியில் இறங்கிய அந்த நாள் . . . 

அதே கூச்சலோடும் ,கொன்டாட்டத்தோடும்  -  ஆசிரியரின்
   அதட்டலோடும், மிரட்டலோடும் 
அழகாய் தான் நகர்ந்தன நேரங்கள் . . .  

பத்து மணி வரை . . . 

அப்பாவின் ஆடை போல் அணிந்து 
     ஆறு பேர் வந்தனர் விரைந்து 
கண்களில் ஆத்திரத்தோடும் 
      கைகளில் ஆயுதங்களோடும் . . . 

அன்பாய் தான் சிரித்தேன் நானும்  
  அதற்கு ஏன் சுட்டனர் , விடையில்லை ?
பழம் கொடுத்த நண்பன் இருந்தான் 
  பார்பதற்குள் படுத்து விட்டான்  பக்கத்தில் . . .

நெற்றி பொட்டில் அவனுக்கு ஏனோ 
  பொட்டு வைத்தனர் தோட்டா கொண்டு 
எழுப்பிப் பார்த்தேன் எழுவான் என்று 
  படுத்தவன் விளையாட்டாய்  படுத்தால் தானே . . . ?

ஆசிரியர் மிரட்டினால்  - நீர் 
  அப்படியே போய்விடும் எனக்கு, 
அடிப்பதை விடுத்தனர் அவர்களும் 
  அப்படியே விட்டு விடுவார்களா  இவர்களும்  . . . ?

அப்பாவை கூப்பிட்டுப்  பார்த்தேன் 
  அம்மாவையும் கூப்பிட்டுப்  பார்த்தேன்  - அழுகையோடு 
ஆசானைக்  கூப்பிட்டுப் பார்த்தேன் - இறுதியில் 
  ஆண்டவனை கும்பிட்டும் பார்த்தேன் . . . 

பதறியும் பலனில்லை , 
  கதறியும் கருணையில்லை. . .

 இதோ விழுந்துவிட்டேன் . . . 

விழுகையில் எனக்கு சிந்தனை  ஒன்றே 
    எதற்கு சுட்டனர் எங்களை என்று  . . . ??

ஆசிரியர் அவர்களை அடிதிருப்பரோ ?
    அண்ணன் ஒரு வேலை கிள்ளியிருப்பானோ ?
கொடுக்காமல் தின்ன கொய்யாவிற்க்காகவோ ?  - என் 
    இரவு அழுகை அவர்களை எழுப்பியிருக்குமோ ?

எதற்காக ????????

1 comment: