Tuesday, May 30, 2017

பிரிந்துவிடு என் பிரிவே !



 வாழ் நாள் அறிந்திடாத - இதுவரை
வாழ்க்கையில் கிடைத்திடாத,

கொடுமை, நீ இல்லா இத் தனிமை !

தனிமையிடம் என்னை
  தனியாய் விடும்படி கேட்டேன்,
அறிந்திடாத வலியை எனக்கு
 அறிமுக படுத்தி  சென்றது  . . .

அருகில் இருக்கும் வரை  - எனை
 ஆட்கொள்ள முடியவில்லை போலும் ,
தூரமாய் நீ சென்றதும் - என்னை
  துளையிட ஆரம்பித்தது மெதுவாய் . . .

நிதர்சனம் எது வென்று
நினைவுக்கு தெரிய வில்லை !
அவளோடு செலவிட்ட அந்நாட்களா ?
அவளின்றி இருண்டிருக்கும் இந்நாட்களா !

நிதானம் இழக்கவில்லை
 நான்  இன்னும் ,
நிலவோடு கழிந்த என்
 நாழிகைகள் தான் உண்மை !

கண்ணில் பட்ட யாவும்
 கன்னியையே ஞாபக படுத்த,
கண்களின் ஓரங்களில் கசிந்து
கால்வாய் ஒன்று ஓடியது . . .

தண்ணீரில் ஒரு மீன்
 தன் துணை இழந்து,
கண்ணீர் கண்களுடன்
  கரை ஒதுங்கி நிற்க !

கிளையில் துணையின்றி
 கிளி ஒன்று அமர்ந்து,
கவலை பொங்கிட
 காதல் ராகம் இசைக்க !

இது போல் இல்லை
 இது நாள் வரை . . .

கருகிய பூக்கள் மட்டும் - என்
 கண்ணுக்கு தெரிவது ஏனோ?

வாடை காற்று என்
 வலியினை ஆற்றாதது ஏனோ?

ஓடிய மேகங்கள் எல்லாம்
வாடிய தேகங்களாய் ஏனோ?

மெல்லிய இசை கூட
முள் குத்துவதுபோல் ஏனோ?

இயற்கை அனைத்தும்
இடம் மாறியது ஏனோ?

இது போல் இல்லை
 இது நாள் வரை . . .

தூரத்தில் நீ இருப்பதால்
தொலைந்து போனது என் அத்தனையும் !

அருகில் வந்துவிடு - இல்லை
அரளி விதை அனுப்பிவிடு . . .

No comments: